பெங்களூருவில் இருந்து சேலத்திற்குசரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்டிரைவர் கைது

Update:2023-08-06 00:58 IST

ஓமலூா்

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து கடத்திய 180 கிலோ குட்கா கடத்தப்பட்டது. அந்த வாகனத்தை ஓமலூர் அருகே போலீசார் மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் ஊர்க்காவல் படையினர் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்திபள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அந்த வண்டியில் ரகசிய அறை அமைத்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேலே இருந்த மரப்பலகையை எடுத்து விட்டு பார்த்தபோது மூட்டை, மூட்டையாக குட்கா அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

கைது-பறிமுதல்

இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேச்சேரி வெள்ளார் வெள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த இளையபாரதி (வயது 27), என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன் மற்றும் 180 கிலோ எடையுள்ள ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்