பெண்களுக்கான சுகாதார உதவியாளர் பயிற்சி
பெண்களுக்கான சுகாதார உதவியாளர் பயிற்சி அளிக்கப்பட்டது.;
கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்டு நிறுவனத்தில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சமுதாய மேம்பாடு அடையும் நோக்கில் டால்மியா ஆலைத்தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் இயங்கும் தீக்ஷா திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் நபார்டு வங்கி மற்றும் டால்மியா நிறுவனத்தின் பங்களிப்போடு பெண்களுக்கான சுகாதார உதவியாளர் பயிற்சி 3 மாதங்கள் நடைபெற்றது. பயிற்சி முடிவடைந்ததை தொடர்ந்து பயிற்சி பெற்ற 28 பெண்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு டால்மியா சிமெண்டு ஆலை துணைப்பொதுமேலாளர் பழனியப்பன், பவுண்டேசன் மேலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி பொது மேலாளர் இங்கர்சால் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் அரியலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனடிக், திருச்சி மாவட்ட நபார்டு வங்கி துணை பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆலை அதிகாரிகள், பயிற்றுநர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நிலைய பயிற்றுநர் நிஷாராணி நன்றி கூறினார்.