கொட்டித்தீர்த்த கனமழை

தலைஞாயிறு, வாய்மேடு, திருமருகல் பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்து. இதில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.

Update: 2023-04-24 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு, வாய்மேடு, திருமருகல் பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்து. இதில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.

பலத்த இடியுடன் கன மழை

நாகை மாவட்டம் வாய்மேடு, தலைஞாயிறு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இதனால் மின்விசிறியில் அனல் காற்று வீசியது.

வாய்மேடு, தலைஞாயிறு சுற்றுவட்டார பகுதிகளான தகட்டூர், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம், மருதூர், தென்னடார், பஞ்சநதிக்குளம், உம்பளச்சேரி, வாட்டாகுடி, மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

மின்னல் தாக்கி பசுமாடு சாவு

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கன் குத்தகை பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், கால்நடை டாக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த மாட்டை பார்வையிட்டனர்.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எள் சாகுபடிக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

திருமருகல்

இதேபோல் திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், திருப்புகலூர், வவ்வாலடி, ஆலத்தூர், குத்தாலம், எரவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென அதிகாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. காலை 4 மணி அளவில் பெய்யத்தொடங்கிய மழை 1 மணிநேரம் நீடித்தது. இந்த திடீர் மழையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பயறு முழுவதும் மழையில் நனைந்தன. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்