ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை

ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2023-05-31 21:00 GMT

ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆண்டிப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கொட்டித்தீர்த்த கனமழை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று வழக்கம்போல் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

ரெயில்வே சுரங்கப்பாதை

குறிப்பாக ஆண்டிப்பட்டியில் இருந்து தெப்பம்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்த பொதுமக்கள் அவதியடைந்தனர். இருசக்கர வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியவில்லை. அதேபோல் சுரங்கப்பாதையில் சென்ற சில வாகனங்கள் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது.

இதனால் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆண்டிப்பட்டியில் இருந்து தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, ராஜதானி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் ெரயில்வே தண்டவாளத்தின் வழியாக மறுகரைக்கு நடந்து சென்று, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

கடமலைக்குண்டு

இதேபோல் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடமலைக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று முன்தினம் வெள்ளிமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வருசநாடு மூலவகை ஆற்றில் நேற்று நீர்வரத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்