கோவை, ஆக.5-
கோவையில் நேற்று சாரல் மழை பெய்தது.
கோவையில் மழை
கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
வால்பாறையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. மேலும் மாலை வரை விடாமல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள் குடை பிடித்தபடி சென்றனர். சிலர் ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி குடைபிடித்து சென்றனர். சரவணம்பட்டி, கணுவாய், பீளமேடு, கவுண்டம் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளை யம், வடகோவை உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்தது.
குண்டும், குழியுமான சாலைகள்
மேம்பால பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கியதால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மழை காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. சுண்ணாம்பு காளவாய் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் நுரையுடன் வெளியேறியது.
மழை அளவு
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.) விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் 41.50, சின்கோனா 70, சின்னகல்லார் 142, வால்பாறை பி.ஏ.பி. 122, வால்பாறை தாலுகா 121, சோலையார் 86, ஆழியார் 42, பொள்ளாச்சி 6, வேளாண்மை பல்கலைக்கழகம் 0.5.