ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்ததுபரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிப்பு

Update: 2023-09-03 19:00 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்தது. பரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல்

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது நேற்று 2-வது நாளாக நீடிக்கிறது.

இதன் காரணமாக நேற்று விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர்

இதற்கிடையே மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,018 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6,430 கனஅடியாக அதிகரித்தது.

இருப்பினும் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் 48.48 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 48.24 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்