வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள்

சிவகங்கை அருகே சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-06-10 18:45 GMT

சிவகங்கை அருகே சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு விழா

சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு நேற்று சிவகங்கை அருகே உள்ள கத்தப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வாளுக்குவேலி அம்பலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:- வீரமங்கை வேலுநாச்சியார், மருதுசகோரதர்கள் வாழ்ந்த இந்த பூமியில் சுதந்திர போராட்ட வீரரான வாளுக்கு வேலி அம்பலத்தை போற்றும் வகையில் அவரின் வாரிசுதாரர்கள் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அனைவரின் முயற்சியில் இந்தாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. வாளுக்குவேலி அம்பலத்தின் வீரம், தியாகம் மற்றும் அவரது பெருமையை உலகிற்கு அறியும் வகையில் இந்த விழாவை அரசு விழாவாக அறிவித்து சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் அரசின் சார்பில் அவருக்கு உருவ சிலை அமைக்கவும் உத்தரவிட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார். தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:- சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் புகழை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் தென்னவன், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உள்பட அரசு அதிகாரிகள், வாரிசுதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. சாா்பில்

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஸ்டீபன் அருள்சாமி, செல்வமணி, நாகராஜன், பொன்மணி பாஸ்கரன், மெய்யப்பன், காளையார்கோவில் பழனிச்சாமி, சிவாஜி, கருணாகரன், கோபி, முருகன், தமிழ்செல்வன், இளங்கோவன், பில்லூர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளரும், ஆவின் தலைவருமான கே.ஆர்.அசோகன் தலைமையில் தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்