வீடு புகுந்து 13 பவுன் நகை கொள்ளை
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து 13 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை, பணம் கொள்ளை
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பிரஸ் காலனியை சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 64). இவர் துணிகளுக்கு எம்ராய்டிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாய்ராபானு. மகன்கள் முகமது ஆசிக், முகமது சித்திக் ஆகியோர் உள்ளனர். மகன்கள் 2 பேரும் லண்டனில் வேலை பார்த்து வருகின்றனர். வீட்டில் சிக்கந்தரும், சாய்ராபானுவும் மட்டும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாமனாரின் முதலாமாண்டு நினைவு தினத்திற்காக கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சிக்கந்தர் தனது மனைவியுடன் சென்றார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சிக்கந்தர் வீட்டில் சத்தம் கேட்டு உள்ளது. மேலும் 2 பேர் வீட்டில் இருந்து குதித்து வெளியே தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் சிக்கந்தரை தொடர்பு கொண்டு கூறினார்கள். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அடுத்தடுத்து கைவரிசை
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதற்கிடையில் பொதுமக்களை பார்த்ததும் மர்ம நபர்கள் சிக்கந்தர் வீட்டின் முன் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தப்பி ஓடிய மர்ம நபர்கள் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அதே பகுதியில் ஒரு வீட்டில் 2 பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். சூளேஸ்வரன்பட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் போலீசார் சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.