7 ஆண்டுகளாக அரைகுறையான நிலையில் இருக்கும் நரிக்குறவர்களின் வீடுகள்

கட்டுமானப்பொருள், ஆற்று மணல் விலை உயர்வால் 7 ஆண்டுகளாக அரைகுறையான நிலையில் இருக்கும் நரிக்குறவர்களின் வீடுகள் அரசு நிதி உதவி செய்ய கோரிக்கை

Update: 2023-04-15 18:45 GMT

பெண்ணாடம்

நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் சொந்த நிலத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் அமைத்து இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டி பயன்பெறலாம். இதற்காக தவணை முறையில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஆனால் வீடுகள் கட்ட தொடங்கிய பின்னர் கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவற்றின் விலை உயர்வால் சிலர் கிடைத்த பணத்தை கொண்டு வீடுகளை பாதியிலேயே கட்டி வைத்து உள்ளனர். இன்னும் சிலர் வீட்டை கட்டி முடித்து சிமெண்டு பூச்சு பூசாமலும் என இப்படி அரைகுறையாகவே வைத்துள்ளனர். இதற்கு உதாரணமாக பெண்ணாடம் அருகே உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பை கூறலாம்.

பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் அவதி அடைந்து வந்த இவர்கள் தங்களுக்கு அனைவருக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் 44 பேருக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு வீட்டின் திட்ட மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இ்ந்த தொகை தவணை முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்றது.

ஆனால் கொேரானா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக வீடுகள் கட்டும் பணி நடைபெற வில்லை என கூறப்படுகிறது. இதன் பின்னர் மணல் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக வீடுகளை முழுமையாக கட்டி முடிக்க முடியாமல் நரிக்குறவர்கள் திணறி வருகின்றனர்.

இங்கு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 44 வீடுகளில் 32 வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதில் 19 வீடுகள் 75 சதவீதம், 13 வீடுகள் 50 சதவீதத்துக்கு மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டுள்ள அவல நிலை இருந்து வருகிறது. இதனால் தற்போது வேறு வழியின்றி புதிதாக கட்டி வரும் வீடுகளின் அருகிலேயே குடிசை அமைத்து நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

இது குறித்து நரிக்குறவர்கள் கூறும்போது, வெயலிலும், மழையிலும் அவதி அடைந்து வந்த நாங்கள் புதிதாக கான்கிரீட் வீடு கட்டி குடியேறலாம் என்ற கனவோடு இருந்தோம். ஆனால் அந்த கனவு வெறும் கானல் நீரான கதைபோல ஆகி விட்டது. காட்டுமான பொருட்களின் விலை உயர்வால் மேற்கொண்டு வீடுகளை கட்டி குடியேற முடியாமல் திண்டாடி வருகிறோம். எனவே தங்களின் வீடு கட்டும் பணிக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி தருவதோடு, ஆற்று மணலையும் அரசே வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்