கியாஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை நிர்ணயித்து வருகின்றன1. அந்தவகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 1,068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட ஒரு சிலிண்டர் விலை, 1,118 ரூபாய் 50 காசுக்கு இனி விற்பனை செய்யப்பட உள்ளது.

Update: 2023-03-01 17:50 GMT

இல்லத்தரசிகள் கொதிப்பு

இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரித்து, இனி ரூ.2 ஆயிரத்து 268-க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால் டீக்கடை, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் பலகாரங்கள், உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சமையல் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதித்து போய் இருக்கின்றனர்.

இதுகுறித்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

தேர்தல் முடிந்தவுடன்...

அரியலூர் மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த கவிதா:- வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகளை தேர்தல் முடிந்தவுடன் உயர்த்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக உள்ள சூழ்நிலையில் தற்போதைய விலை உயர்வு எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. இதற்கு விறகு அடுப்பே தேவலாம் என்ற நிலைக்கு பொதுமக்கள் செல்லும் நிலைக்கு மத்திய அரசு தள்ளுகிறது. விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

அடித்தட்டு மக்கள் பாதிப்பு

விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த தமயந்தி:- தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வினால் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களும் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். மத்திய அரசு இலவசமாக கியாஸ் அடுப்பை கொடுத்து விட்டு இப்படி தொடர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஏற்றி சென்றால் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் பொதுமக்கள் நிலை என்னவாகும். இதை மத்திய அரசு உணர வேண்டாமா. ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவையாகி உள்ள சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பொருட்கள் விலை உயரும்

அரியலூரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் நாகராஜ்:- வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது ரூ.351 அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகள் உயர்ந்த நிலையில் தற்போது கியாஸ் விலை உயர்வால் பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக கூடும். இதனால் வியாபாரம் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்