நாமக்கல்லில் சர்வதேச காடுகள் தின விழிப்புணர்வு மனித சங்கிலி-கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று சர்வதேச காடுகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி நிகழ்ச்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், இளைஞர் ரெட்கிராஸ் சார்பில் பூங்கா சாலையில் சர்வதேச காடுகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கைகோர்த்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் போது கல்லூரி மாணவ, மாணவிகள் வன வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அரிதான உயிரினங்களை பேணி பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மஞ்சள் பையும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
உறுதிமொழி ஏற்பு
இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் காடுகள், வன உயிரினங்களை பாதுகாக்கும் மையமாகும். இந்த காடுகளில் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வதற்கு நான் இடையூறாக இருக்க மாட்டேன். வன உயிரினங்கள் வாழும் இடத்தை ஆக்கிரமிக்க மாட்டேன். நம்நாடு பல்லுயிர் பரவல் கொண்ட நாடு என்பதில் பெருமை அடைகிறேன் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ் கண்ணன், உதவி வன பாதுகாவலர் அல்லிராஜ், வனச்சரகர்கள் பெருமாள், திருச்செந்தூரான், சித்த மருத்துவர் பூபதி ராஜா மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன், இளைஞர் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்து இருந்தனர்.