"மாற்றுத்திறனாளிகள் துறையை எனது தனி கவனிப்பில் வைத்துள்ளேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-24 06:44 GMT

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்தில் கொள்கைகளை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக இருந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

அரசின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படிதான் திட்டமிடுகிறோம், செயல்படுத்துகிறோம். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில், குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள். அவர்களது உரிமையைக் காக்கவும், சமுதாயத்தில் சமநிலையில் வாழ்வதை உறுதி செய்திடவும், 2011-ம் ஆண்டில், கலைஞரால் இது தனி துறையாக உருவாக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் துறையை நானும் எனது தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன். திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய், இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

மனவளர்ச்சிக் குன்றிய மற்று புறஉலக சிந்தனை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் தொழில் தொடங்க உதவி செய்ய குறைந்தபட்ச கல்வித்தகுதியினை 8-ம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும் வயது உச்சவரம்பை 45 லிருந்து 55-ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பஸ்களில் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உதவித் தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தும், தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்