கலெக்டர் பெயரில் அரசு அலுவலர்களிடம் பணம் பறிக்க முயற்சி

கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் பெயரில் அரசு அலுவலர்களிடம் பணம் பறிப்பதற்காக வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-15 18:57 GMT

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது செல்போனில் முகப்பு படமாக வாட்ஸ்-அப்பில் வைத்துள்ளார்.

மேலும் வாட்ஸ்-அப் மூலமாக அவரது எண்ணில் இருந்து பல்வேறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்புவது போல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார். அதில் தனக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இந்த குறுந்தகவலை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அரசு அலுவலர்கள், தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் (குற்றவியல்) அன்பழகன், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், கலெக்டர் பெயரை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் பணம் பறிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் மூலம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்