தவெக பொதுக்கூட்டம்-விதிகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: செங்கோட்டையன்

கூட்டம் நடைபெறும் இடத்தில், குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறை, தீயணைப்பு வாகனம், பாதுகாப்பு அரண் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று செங்கோட்டையன் கூறினார்.;

Update:2025-12-15 20:54 IST

ஈரோடு,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன்படி வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களிடம் பேசுகிறார்.

கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டத்துக்கு காவல்துறையால் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதற்கான பதில் மற்றும் ஆவணங்களை த.வெ.க.வினர் சமர்ப்பித்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கான அனுமதி பெறப்படவில்லை என காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோவில் செயல் அலுவலரால் கடிதம் எழுதப்பட்டது.

எனவே கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாத சான்று பெற்றுத்தரும்படி காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தவெக ஏற்றுக்கொண்டதால், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது: -

தவெகவில் இணைந்த பிறகு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. ஒரு சகோதரனாக விஜய் என்னை அரவணைத்துக்கொண்டார். அவரை முதல் அமைச்சர் ஆக்குவதற்காக கடுமையாக உழைப்போம்.ஈரோட்டில் விஜய் கூட்டத்தில் பங்கேற்கும் மக்கள், காவல் துறை விதிகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கூட்டம் நடைபெறும் இடத்தில், குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறை, தீயணைப்பு வாகனம், பாதுகாப்பு அரண் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய விளம்பரம் உள்ள, கட்-அவுட் உள்ள இடங்களில் தொண்டர்கள் ஏறாமல் இருப்பதற்கு முள் கம்பிகள் சுற்றப்படும்.சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்பு அங்கிருந்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கார் மூலம் விஜய் வருவார்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்