நெல்லையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்- இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் கைது
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்;
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் சில தினங்களுக்கு முன்பு அஸாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். திருநெல்வேலியில் வசித்து வரும் அஸாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் வயது (27), என்பவர் ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். போதிய அடிப்படை வசதிகள் இலாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹுசைன் இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறிய அவர் பைக்கில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார். ஆட்டோ அங்கு சென்றதும் தம்பதி கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக டிரைவரிடம் கூறிய முகமது மஹ்புல் ஹுசைன் அவர்கள் இருவரையும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவரை தாக்கிய முகமது மஹ்புல் ஹுசைன் உள்பட மூவரும் அவரது கண் எதிரிலேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்கு பின் இருவரையும் ரோட்டு பகுதியில் விட்டுவிட்டு மூவரும் தப்பியோடியிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கணவர் கண் எதிரிலேயே அஸாம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.