தபால் தலை சேகரிப்பு காட்சியகம் திறப்பு
ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை சேகரிப்பு காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது.;
ஊட்டி
ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை சேகரிப்பு காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது.
காட்சியகம்
அஞ்சல்துறை சார்பில், இளைய தலைமுறையினருக்கு அஞ்சல் தலை மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை சேகரிப்பு காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமிதா அயோத்தியா முன்னிலை வகித்தார். இதில் அஞ்சல் துறை தலைவர் சாருகேசி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
காட்சியகத்தில் தாவரங்கள், விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, ரெயில்வே வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள், புவியியல் குறியீடு தயாரிப்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் 30 தபால் தலை சட்டகங்கள் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நினைவுப் பொருட்கள் மற்றும் அஞ்சல் தலை பொருட்கள் விற்பனை செய்யும் அஞ்சல் தலை கவுன்டர் மற்றும் "மை ஸ்டாம்ப்" கவுன்டர் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் இந்திரா கூறியதாவது:-
அறிவு திறன்
பொழுதுபோக்கு அம்சங்களின் அரசன் என்று கருதப்படும் அளவுக்கு தபால் தலை சேகரிப்பு பலரிடம் தற்போது உள்ளது. தபால் தலை சேகரிப்பு தகவல்களின் புதிய பரிணாமத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒருவரின் அறிவு திறனை பெருக்குவதற்கும் சிறந்த வழியாக உள்ளது. இந்த காட்சியகம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் தபால் தலை சேகரிப்பு தொடர்பான வினாடி-வினா, கடிதம் எழுதுதல், ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காட்சியகத்தில் இடம்பெற்ற தபால் தலைகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அகில் நாயர், உதவி இயக்குனர்கள் கமலேஷ், ஜெயராஜ் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.