பொள்ளாச்சியில் தொடரும் சம்பவம்:வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

Update:2023-03-07 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை திருட்டு

பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 77). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கண் பார்வையில் பிரச்சினை இருந்ததால் உடுமலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சமத்தூரில் உள்ள தனது மகள் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் அருகில் ஒரு வீட்டில் நகை, கேமரா போன்றவை திருடுபோனதாக தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து தனது வீட்டிலும் திருடி இருக்கலாம் என்று சமத்தூரில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4¾ பவுன் நகை, ரூ.7 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மூகமூடி அணிந்தும், கையுறை அணிந்து மர்ம ஆசாமிகள் செல்வது போன்று பதிவாகி உள்ளது.

மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் சேரன் நகர் பகுதியில் பூட்டி கிடந்த 2 வீடுகளில் அடுத்தடுத்து நகை திருடிய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி திரியும் திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்