இந்தியாவிற்கு ஜி20 தலைமை ஏற்கும் வாய்ப்பு, பிரதமரின் கடுமையான முயற்சியால் கிடைத்துள்ளது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

ஜி20 தலைமை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு சுழற்சி முறையில் கிடைக்கவில்லை. பிரதமரின் கடுமையான முயற்சியால் கிடைத்துள்ளது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2023-09-03 19:15 GMT

ஆகாசவாணி ஜி20

இந்தியாவின் பொதுச்சேவை ஒலிபரப்பான பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் சென்னை ஆகாசவாணி சார்பில் ஜி20 இந்தியா தலைமை ஏற்பதை பெருமையாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

குறிப்பாக 14 தலைப்புகளின் கீழ் 12 கருத்தரங்குகள், 10 கர்நாடக இசை நிகழ்ச்சிகள், 10 நடன நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள், மாநகர் முழுவதும் வாகன பிரசாரம், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து, நிறைவு விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு பரிசு

தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டும் அவர் பேசும்போது, 'ஜி20 தலைமை ஏற்கும் இந்தியாவிற்கு அது சுழற்சி முறையில் வரவில்லை. பிரதமரின் கடுமையான உழைப்பின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.

ஜி20 மாநாட்டில் முகப்பில் சிவனுடைய ரூபமாகவும், தமிழகத்தின் கலாசாரமாக திகழும் தில்லை நடராஜரும் நிறுவப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டு கலாசாரத்தை மதிக்கின்றனர். இங்கிருக்கும் சிலர் நம்முடைய கலாசாரத்தை மதிப்பதில்லை. பிரதமர் நம்முடைய கலாசார பெருமைகளை உலக அளவில் கொண்டு செல்கிறார்.

விண்வெளி துறை சாதனை

விண்வெளித்துறையில் நாம் சாதித்து வருவதை உலக நாடுகள் நம்மை பார்த்து பெருமை கொள்கிறது.அதேபோல் கொரோனா மருந்தை 150 நாடுகளுக்கு நாம் வழங்கி சாதனை படைத்துள்ளோம். இளைஞர்களும் எந்த மாற்றத்தையும் நம்மிடம் இருந்து கொண்டு வர பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை

நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி பேசும்போது, 'மாணவர்கள் சேர்க்கையில் விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு என இடஒதுக்கீடு கொண்டு வர உள்ளோம். அதைப்போல் கலாசார இசையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆவல் உள்ளது. இதற்கு அகில இந்திய வானொலி உதவ வேண்டும்' என்றார்.

தனியார் நிறுவன இயக்குனர் பி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக சென்னை வானொலி இயக்குனர் எஸ்.பாண்டி வரவேற்றார். நிகழ்ச்சி பிரிவு தலைவர் ஜெயா மகாதேவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்