விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள் வழங்க வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள் வழங்க வலியுறுத்தப்பட்டது

Update: 2022-06-26 20:01 GMT
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட அந்த கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து, வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி் முதல் 9-ந் தேதி வரை திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசான பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் இயக்குகிறது. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை கண்டித்து இளைஞர்கள் போராடி வருகிறார்கள். ஆகவே, அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

நெல்லுக்கு ஆதார விலை

நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் விலையினை தீர்மானிக்க வேண்டும். உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி கூட்டுறவுத்துறை மூலம் தமிழக அரசு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

ஜனாதிபதி தேர்தல்

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும்போது, அதனை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஜனாதிபதி தேவை. பகுஜன் சமாஜ் கட்சி தனது கருத்தை தெரிவித்திருப்பது அவர்களது விருப்பம். கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்காவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் வெற்றி பெறுவதின் மூலமாக நாட்டினுடைய இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் தேசிய குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ..சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்