வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு நடைபெற்றது.

Update: 2023-02-10 19:00 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாலை, குடிநீர், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் ஊரகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார். பின்னர் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகத்திற்கான கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குறித்தும், விஜயகோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சிறுவாச்சூர் பகுதியிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சுவைத்துப் பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்