உயர்கல்வி படிப்புக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்

உயர் கல்வி படிப்புக்காக, மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தால் விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி அலுவலர்களுக்கு கலெக்டர் அருணா உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-10-23 00:45 GMT

நீலகிரி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அப்போது அவர் வங்கி அதிகாரிகளிடம் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு நபர்கள் கடனுதவிகள் பெற வங்கிகளை நாடிவரும்போது, கடன் விண்ணப்பங்கள் பெற்றவுடன் சம்மந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் உடனடியாக அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கடன் வழங்க முன்வர வேண்டும்.


குறிப்பாக உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற வங்கியில் விண்ணப்பித்தால், அதை காலதாமதமின்றி விரைவில் பரிசீலனை செய்து, கடன் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், எந்தவொரு விண்ணப்பங்களும் உரிய காரணங்கள் இல்லாமல் நிராகரிக்கக் கூடாது. ஒவ்வொறு துறைகளின் வாயிலாக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு துறைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டும் வகையில், துறை அலுவலர்கள் திறம்பட செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், உதவி பொது மேலாளர் (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா) அமிர்தவள்ளி, உதவி பொது மேலாளர் (நபார்டு) திருமலைராவ், தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் குமாரவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்