ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Update: 2023-02-23 19:05 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நகராட்சி ஆணையாளர் கீதா மேற்பார்வையில் தொடங்கியது. இதில் கட்ட கோபுரம் அமைந்துள்ள தெருவில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர் ஒருவர், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாரபட்சம் இன்றி நடக்க வேண்டும். ஆனால் திருக்கோவிலூரில் அப்படி நடப்பதாக தெரியவில்லை. ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு சட்டமா? . உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை திருக்கோவிலூரில் பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதனை எப்போது அகற்றுவீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இந்த நிலையில் அங்கு வந்த உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகி கோலாகலன் என்கிற கிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் கீதா மற்றும் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோரிடம் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. எனவே தற்போது ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி கோவில் கோபுரம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டு தரவேண்டும் என்றார். இருப்பினும் திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதை தவிர்க்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நேரில் வந்து திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்