டெங்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

தேவகோட்டையில் டெங்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.

Update: 2023-09-30 18:45 GMT

நகர்மன்ற கூட்டம்

தேவகோட்டை நகர் மன்ற கூட்டம் அதன் தலைவர் கா.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தலைவர் சுந்தரலிங்கம் பேசும்போது:- டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் தேவகோட்டையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கை, முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சல் பற்றி ஆலோசனைகளும், வீடுகளில் யாராவது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

டெங்கு தடுப்பு

நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகோட்டை நகரில் டெங்கு காய்ச்சல் இல்லாத நகராக உருவாக்க நகராட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேலும் நகராட்சி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சீரமைக்கவும், பழுதான மின்கம்பங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவகோட்டை 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என்று பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்