அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்டு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்துள்ளது.

Update: 2022-12-15 12:45 GMT

சென்னை,

கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அவரது சொத்துக்களையும் முடக்கியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணையும் நடத்தியது.

இதனை அடுத்து, சொத்துக்கள் முடக்கத்தை எதிர்த்தும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் விசாரணையை எதிர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணபரிமாற்றம் தடைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து, வழக்கு விசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு தள்ளவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்