நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?
ஒருவருடைய உடல் 'இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.;
ஒருவருடைய உடல் 'இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொல்கிறது.
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி ஏற்படுவது, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக்காலம் பிடித்தல், திரும்பத் திரும்ப தோல், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்படுவது, பாதங்களில் உணர்ச்சி குறைவது அல்லது எரிச்சல் ஏற்படுவது தான் நீரழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமலும் வருகிறது.
நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவை நடுத்தர வயது கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகும்.
இதுதவிர அதிகமாக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு நம்மை அழைத்து செல்கிறது.
தற்போது இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. உலக அளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது 4 மடங்கு அதிகமாகி உள்ளது என்கிறது.
அதிகரிக்கும்
உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019-ம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும்.
சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட 4 பேரில் ஒருவர் 'டைப்-2' நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
உலக நீரிழிவு தினம்
இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்த அக்கறையோடு உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு இந்நாளை உருவாக்கின.
160 நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.
தலைநகராக மாறுகிறதா?
இதுகுறித்து பொது மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் எஸ்.அமுதகுமார் கூறும் போது, 'நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 'பணக்காரர்களின் நோய்' என்று கூறிவந்த நிலை மாறி 'வெகுஜன நோய்' என்று சொல்லும் நிலைக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு கூறும் கணக்கெடுப்பின்படி 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல், கிராமப்புறங்களில் சுமார் 3 சதவீதமும், நகர்புறங்களில் 6 சதவீதமும் இருந்தது. தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வேலைகளுக்கு செல்லாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இளம் வயதினருக்கும் அதிகம் பரவ ஆரம்பித்துவிட்டது. கலோரி, சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ரசாயன பொடிகள் அதிகம் உள்ள உணவுகள், சுத்தமில்லாத உணவுகளை எந்த கவலையும் படாமல் அதிகமாக உண்பதே தமிழ்நாட்டில் சர்க்கரை நோய் பரவ காரணமாகி விடுகிறது. உணவு கட்டுப்பாடு மிக அவசியம் தேவை. தற்போதைய நிலையில் நீரிழிவு நோயின் தலைநகராக தமிழ்நாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது' என்றார்.
தமிழகத்தில் 20 சதவீதம்
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்த டாக்டர் பா.சதீஷ்குமார் கூறியதாவது: உலக அளவில் 50 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எட்டு கோடி பேர். அதில் தமிழகத்தில் 20 சதவீதம் மக்களும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்
3 விதமான நீரிழிவு நோயில் முதலாவது வகையானது குழந்தைகள் சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினருக்கு ஏற்படுகின்றது இவர்களுக்கு இன்சுலின் கொண்டு தான் சிகிச்சை அளிக்க வேண்டும்
இரண்டாவது வகை நீரிழிவு போதிய அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 சதவீத விதமான நோயாளிகளில் காணப்படுகிறது
மூன்றாவது வகையானது பெண்களுக்கு ஏற்படுவது. கர்ப்ப கால சமயத்தில் ஏற்படும் நீரழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகி விடுகிறது. இருப்பினும் குழந்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதாவது இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்த்துக் கொள்வது நல்லது.
நீண்ட கால நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழுத்தல், கோமா மற்றும் இறப்பு வரை ஏற்படும்.
நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் போது நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது. அதேபோல் நல்ல உணவு பழக்க வழக்கம், முழு தானியங்கள், நீர் சத்து நிறைந்த உணவு வகைகள் போன்றவை இந்நோயை கட்டுப்படுத்தப்படுகின்றன
நம் தமிழக அரசின் சிறப்பான அணுகுமுறையான மக்களை தேடி மருத்துவம் மூலம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வீடு தேடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த சக்கரை நோய் இல்லாத உலகை கொண்டு வருவோம்.
சிறுதானிய உணவு
இந்திய மருத்துவ சங்க ஆரணி கிளை முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன்: நம் உடலில் கணையம் என்கின்ற ஒரு உறுப்பில் பீட்டா செல் எனப்படும் இன்சுலின் சுரக்கின்ற செல் ஒரு உள்ளது. இன்சுலின் சரியான அளவில் சுரக்காவிடில் அல்லது சுரக்கின்ற இன்சுலின் குறைபாடாக இருந்தால் நம் உடலில் சர்க்கரை நோய் உருவாகிறது. இது பரம்பரை வியாதியாகவும் உள்ளது.
நம் நாட்டில் இப்பொழுது மக்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, உழைப்பு இல்லாததே இதற்கு மூல காரணமாக உள்ளது. கார்போஹைட்ரேட் இருக்கின்ற அதிகமான உணவுகளை தவிர்த்து புரோட்டின் சரியாக இருக்கிற உணவை பயன்படுத்துவதன் மூலமும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சர்க்கரை நோயால் கண், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்தக்குழாய்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு மிகவும் பாதிப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கும். எனவே மக்கள் இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நம் உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிப்பதை தவிர்க்கலாம். மேலும் சிறுதானிய உணவு வகைகள், முளைகட்டிய பயிர் வகை உணவு வகைகளை உண்டு வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
மன அழுத்தம்
அரக்கோணம் பகுதியை சேர்ந்த நாகேஷ்: தமிழகத்தில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள் என இந்திய நீரிழிவு நோய் பவுண்டேஷன் தெரிவித்திருந்தது.
இதனை தவிர்க்க அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்ட உணவுகளையும், ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவை உடல் நலனுக்கு நல்லது என நிபுணர்கள் தெரிவிப்பததை பின்பற்றினால் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த சீ.ராஜேந்திரன்: நான் கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதுவரை தீர்ந்தபாடில்லை. டாக்டர்கள் சொன்னபடி மருந்து எடுத்துக் கொண்டாலும் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது. நோய் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வேறு டாக்டரிடம் போனால், "அந்த மாத்திரை வேண்டாம். நான் கொடுக்கும் மாத்திரை சாப்பிடு" என்று அதைவிட விலை உயர்ந்த மாத்திரைகளை தருகிறார்கள். அவை வெளிமார்க்கெட்டில் கிடைப்பதில்லை. பணக்காரர்கள் நோயாக இருந்து வந்த இந்த நோய் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வருகிறது. இதற்கு சரியான சிகிச்சை முறை தேவை.
சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடும்போது பலருக்கு ரத்த கொதிப்பு நோய் இலவச இணைப்பாக வந்துவிடுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாவிட்டால் கல்லீரல், கண், இதயம், சிறுநீரகங்கள் போன்ற மிக முக்கியமான உறுப்புகள் பாதிக்கும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலானவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்து தேவைப்படும் சூழல் இப்போது உள்ளதால், அனைவருக்கும் குடும்ப அட்டை மூலமாக இதற்கான சரியான மருந்தை அரசே தேர்வு செய்து இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.
உடற்பயிற்சி, நடைபயிற்சி
போளூரைச் சேர்ந்த அரசு டாக்டர் ஆர்.விஷால்:- கூடுமான அளவிற்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாப்பது நல்லது. இயந்திரத்தனமான இந்த உலகில் பொதுமக்கள் சரியான உணவு முறையை கடைப்பிடிப்பதில்லை, மேலும் சரியான உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனாலேயே சர்க்கரை நோய்க்கு பலர் ஆளாகின்றனர்.
கடைகளில் விற்கப்படும் அசைவ உணவுகள் மற்றும், எண்ணெயில் பொறித்த பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். இயற்கையான உணவு முறைகள், காய்கறிகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. நீரிழிவு நோயில் இருந்தும் பாதுகாத்துகொள்ளலாம்.
குடியாத்தத்தை சேர்ந்்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.தசரதன்: 10 ஆண்டுகளுக்கு முன்னதாக எனக்கு உடல் சோர்வாக இருந்தபோது சர்க்கரை அளவு 220 என இருந்தது. உணவுக்கு முன்னதாக அந்த அளவு 170 இருந்தது. மெட்பார்மின் 500 கொடுத்தார்கள். இன்றளவுக்கும் அதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நோய் தீரவில்லை. மருந்தின் சக்தியும் கூட்டப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிப்பதால் அந்த நோய்க்கான மருந்துகள் அதிகம் விற்கும் நாடாக நமது நாடு மாறி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்கு சித்தா, ஓமியோபதி, இயற்கை முறைகளைக் கொண்டு சரியான மருந்தைக் கொடுத்து காப்பாற்ற அரசாங்கம் முன்வர வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு வகையான பெயர்களில் மருந்துகளை அதிக விலையில் அவர்களே தங்கள் மருத்துவமனைகளில் விற்பதை பார்க்கலாம். அது அவர்களிடம் மட்டும்தான் கிடைக்கும் என்பது வணிகமயமாகிறதோ எனவும் எண்ண தோன்றுகிறது. எனவே சர்க்கரை நோய்களுக்கு என்று ஒரே பெயரில், ஒரே மருந்து, ஒரே விலையில் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும்படியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பத்தூரை சேர்ந்த வி.சதீஷ் ராஜ்:-
தமிழகம் சர்க்கரை நோயில் முதலிடத்தில் உள்ளது இதற்கு நமது உணவுப் பழக்க வழக்கங்களை காரணமாகும் பண்டைய காலங்களில் கேழ்வரகு, சிறு தானிய உணவுகளை உண்டு வந்தோம் தற்போது அனைத்தும் மாறி ரசாயன உணவாக மாறிவிட்டது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினசரி நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு முகாமினை நடத்த வேண்டும், சிறு வயது முதலே பள்ளி கூடங்களில் சர்க்கரை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த பல வருடங்களாக எனக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அதற்காக டாக்டர்கள் பரிந்துரைப்படி உணவு, மருந்து எடுத்து வருகிேறன்.
அவ்வாறு டாக்டர்கள் ஆலோசனை பெற்று தொடர்ந்து மாத்திரைகளை எடுத்து வந்தால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரலாம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கலாம் என நம்புகிறேன்.