மாட்டுத்தாவணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எப்போது அமைக்கப்படும்?- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

மாட்டுத்தாவணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எப்போது அமைக்கப்படும்? என்பதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

Update: 2023-09-29 20:15 GMT

மாட்டுத்தாவணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எப்போது அமைக்கப்படும்? என்பதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

அரசு சலுகைகள்

இந்திய தொழில் கூட்டமைப்பு, கனெக்ட் நிகழ்ச்சியின் 6-வது பதிப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மதுரையில் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்பம் மதுரையில் இருந்து உலகுக்கு என்ற கருப்பொருளில் நடந்த இந்த கருத்தரங்கினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வரவும் தகவல் தொழில் நுட்பம் ஒரு முக்கிய பங்காற்றும்.

மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு பல சலுகைகளை முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். தொழில்களை ஊக்குவிக்கும் இடமாக தமிழகம் இருக்கிறது. உலக அளவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் இப்போது சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சரிவு என்பது நம்மை போன்ற வளரும் நாடுகளில் இருக்காது. வீழ்ச்சி என்பது வளர்ந்த நாடுகளில் வேண்டுமென்றால் இருக்கலாம்.

நிலம் சர்ச்சை

அதே போல் கடந்த காலங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அதிக லாபமும் வளர்ச்சியும் இருந்தது. அவர்கள் செலவினங்களை பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது லாபமும், வளர்ச்சியும் அதிகமாக இருந்தாலும் செலவுகளை கணக்கில் கொள்கிறார்கள். மதுரை மாட்டுத்தாவணியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு சர்ச்சை காரணமாக பணிகள் சற்று தாமதமானது. தற்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. அமைச்சர் மாறினாலும் அரசின் அறிவிப்புகள் மாறாது. எனவே மாட்டுத்தாவணியில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மதுரையில் ஏற்கனவே உள்ள வடபழஞ்சி மற்றும் பாண்டிக்கோவில் அருகே உள்ள தகவல் தொழில்பூங்காக்களில் சில நிறுவனங்கள் இன்னும் தொழில் தொடங்கவில்லை. அவர்கள் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இப்போது சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது. எனவே நிறுவனங்கள் விரைவில் தொழில் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்