மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முன்வர வேண்டும்

மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முன்வர வேண்டும் என்று பொள்ளாச்சியில் வேளாண் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.;

Update:2023-06-11 01:15 IST

பொள்ளாச்சி

மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முன்வர வேண்டும் என்று பொள்ளாச்சியில் வேளாண் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

கருத்தரங்கம்

பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோவை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நேற்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாய விளைப்பொருட்களை உற்பத்தி செய்து, அதை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முன்வர வேண்டும். சிறு தானியங்களை சாகுபடி செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு முதல் 3 ஆண்டுகளுக்கு உதவி வழங்குகிறது. 3 ஆண்டுகளில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கு உரிய பயிற்சி கொடுத்து தயார் செய்ய வேண்டும்.

மண் பரிசோதனை

30 முதல் 40 ஆண்டுகள் வரை ஒரே பயிரை சாகுபடி செய்வதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக புதிதாக நோய்கள் உருவாகிறது. இதுதான் தஞ்சாவூர், கேரள வேர் வாடல் நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என்று சொல்கின்றனர். மண் பரிசோதனை செய்வதன் மூலம் புதிதாக எந்த பயிரை சாகுபடி செய்வது என்பது தெரியும். அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்து, பயிற்சி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சப்-கலெக்டர் பிரியங்கா, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமது, வேளாண்மை துறை அதிகாரிகள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்