திருவண்ணாமலையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம்

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.;

Update:2023-03-05 16:03 IST

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பார்த்திபன், எஸ்.முருகன், சுந்தர்ராஜ், பழனி, மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில தலைவர் சபரிராஜ், தமிழ்நாடு நில அளவை ஒன்றிணைப்பு மாநில தலைவர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

தனியார் முகமை மூலம்...

அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைபடுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியி மாநில தலைவர் ரக்ஷித் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்