குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

குடிநீர் கேட்டு அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2022-09-17 20:52 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள சவுடார்பட்டி மீனாட்சிபுரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் மேற்குதெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதிக்கு பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை.

மேலும் மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டமும் இந்த கிராமத்தில் தோல்வி அடைந்தது. இதனால் குடிநீர் பிரச்சினை கடுமையாக இருந்து வந்துள்ளது. இதே போல் தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாப்பில் கிராம பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சேடபட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த டவுன்பஸ்சை சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்த திருமங்கலம் யூனியன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிஅளித்தனர். தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது. சாலை மறியலால் சேடபட்டி- திருமங்கலம் ரோட்டில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்