அறச்சலூர் அருகே 8 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 14 ஆண்டு ஜெயில்- பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

அறச்சலூர் அருகே 8 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-09-06 21:19 GMT

ஈரோடு

அறச்சலூர் அருகே 8 வயது சிறுமிகள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.3½ லட்சம் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமிகள் பலாத்காரம்

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் சில்லாங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 61). இவர் கடந்த 20-8-2021 அன்று அங்குள்ள ஒரு வாய்க்கால் கரை வாழைத்தோட்டத்தின் முள்வேலி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அதை அங்கு வந்த தர்மா என்கிற தர்மராஜ் என்பவர் பார்த்தார். சங்கர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்த சிறுமி அவருக்கு தெரிந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 8 வயது மகள் என்பதை அடையாளம் கண்ட அவர், நேரடியாக சென்று சிறுமியின் தாயாரிடம் தெரிவித்தார்.

இதனால் பதற்றம் அடைந்த அவர், விரைந்து சென்று மகளிடம் விசாரித்தார். அப்போது அந்த சிறுமி, அந்த தாத்தா (சங்கர்) சாக்லெட், பிஸ்கெட் வாங்கித்தருவதாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததையும், இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறினார். அடிக்கடி இதுபோன்று அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். அது மட்டுமின்றி, அந்த சிறுமியின் தோழியான இன்னொரு 8 வயது சிறுமியையும் சங்கர் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததையும் சிறுமி கூறினார்.

கைது

இந்த சிறுமிகள் 2 பேரும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் வீடுகளில் இருந்தனர். பெற்றோர் சாதாரண கூலித்தொழிலாளிகள் என்பதால், காலையில் சென்று இரவில் வீடு திரும்பி வந்திருக்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்திய சங்கர் தனது வக்கிரத்தை சிறுமிகளிடம் காட்டி உள்ளார் என்ற தகவல்கள் தெரிய வந்ததும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2 சிறுமிகளின் பெற்றோரும் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர். மேலும், ஈரோடு மகளிர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

14 ஆண்டு ஜெயில்

நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். 2 சிறுமிகளை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு தலா 7 ஆண்டுகள் ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் என 14 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார். இன்னொரு பிரிவில் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்த நீதிபதி, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தமிழக அரசு தலா ரூ.3½ லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி ஆர்.மாலதி தனது தீர்ப்பை கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்