லிப்ட்டில் சிக்கிய கேரள தம்பதி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் லிப்ட்டில் கேரள தம்பதி சிக்கினர்.;
நெல்லை:
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் விஜிஜான் (வயது 84). இவருடைய மனைவி மரியா ஜான் (80). இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை செய்து விட்டு, சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று மாலையில் வந்தனர். இவர்கள், கேரளாவுக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிப்பதற்காக 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல ரெயில் நிலையத்தில் உள்ள லிப்டில் ஏறினார்கள்.
அப்போது, எதிர்பாராதவிதமாக லிப்ட் பாதி வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டது. இதையடுத்து லிப்டில் சிக்கிய அவர்கள் இருவரும் உதவி கேட்டு குரல் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், லிப்ட்டில் சிக்கிய வயதான கேரளா தம்பதிகளை பத்திரமாக மீட்டனர். அந்த தம்பதி போலீசாருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டில் பழுது ஏற்பட்டதாக தெரியவந்தது.