தென்மேற்கு பருவமழை தாமதம்...! 4-ந்தேதி வரை வெயில் வாட்டி வதைக்கும் அதற்கு பிறகு 2 புயல்....!

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.

Update: 2023-06-02 10:00 GMT

Source: PTI

சென்னை

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட நான்கு நாட்கள் தாமதமாக ஜூன் 4 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்