கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவை-மதுரை ரெயிலாக மாற்றிவிடுவதால் பயணிகள் குழப்பம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயிலாக மாற்றி விடுவதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
பொள்ளாச்சி
கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயிலாக மாற்றி விடுவதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை-மதுரை ரெயில்
மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு பகல் 1.25 மணிக்கு வந்து சேருகிறது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து 1.25 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து மதுரைக்கு, கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரெயிலை மாற்றி விடுகின்றனர்.
இதனால் பயணிகள் மிகவும் குழப்பம் அடைகின்றனர். பாலக்காடு செல்வோர் மதுரை செல்லும் ரெயிலில் ஏறி, பின்னர் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கழிப்பிடம் மிகவும் அசுத்தமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பயணிகள் குழப்பம்
மதுரையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பழனி, மாசாணியம்மன், மதுரை மீனாட்சியம்மன், மருதமலை போன்ற ஆன்மிக தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை தவிர டாப்சிலிப், வால்பாறை, ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வோரும் அதிகம் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கண்ணூரில் இருந்து கோவைக்கு பகல் 1.15 மணிக்கு ரெயில் வருகிறது. இந்த ரெயிலை அப்படியே 10 நிமிடங்கள் தாமதமாக 1.25 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது. ரெயிலில் கோவை-கண்ணூர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இதனால் கேரளா செல்வோர் தெரியாமல் அந்த ரெயிலில் ஏறி விடுகின்றனர். பின்னர் போத்தனூர் தாண்டி சென்ற பிறகு தான் வேறு ரெயிலில் ஏறி விட்டோம் என்று நினைத்து கிணத்துக்கடவில் இறங்கி பஸ் பிடித்து பாலக்காடு செல்கின்றனர்.
கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லை
இதேபோன்று மதுரை செல்வோர் தெரியாமல் கண்ணூர் ரெயிலில் ஏறி எட்டிமடை வரை சென்று திரும்பி வந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. மேலும் கண்ணூரில் இருந்து கோவைக்கு வந்த ரெயில் 10 நிமிடங்களில் மதுரைக்கு புறப்படுவதால் கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதில்லை. துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் கழிப்பிடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதே மதுரையில் இருந்து கோவைக்கு வரும் ரெயில் ஒரு மணி நேரம் கழித்தே கண்ணூருக்கு இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தப்படுத்திய பிறகே கண்ணூருக்கு புறப்பட்டு செல்கிறது. எனவே பயணிகள் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க கோவையில் இருந்து மதுரைக்கு ஒரே ரெயிலை இயக்க வேண்டும். கழிப்பிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.