ஈரோடு வில்லரசம்பட்டி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு வில்லரசம்பட்டி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
ஈரோடு வில்லரசம்பட்டி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விநாயகர்-மாரியம்மன் கோவில்
ஈரோடு வில்லரசம்பட்டியில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 6-ந்தேதி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அன்று மதியம் 2 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, குரு நியமனங்கள், பூமாதேவி பூஜை, முளைப்பாரி பூஜை, கங்கணம் கட்டுதல், பாலாலயத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் தேவர்களை குடத்தில் எழுந்தருளச்செய்தல் மற்றும் முதல்கால யாக பூஜையும் நடந்தது.
கும்பாபிஷேகம்
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், கோபுர கலச பூஜைகள், யாக திரவியங்கள் ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு கோபுர கலசங்கள் ஊர்வலமும், கலசம் வைத்தல், கோபுரம் கண்திறப்பு, 3-ம் கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு சிலைகளுக்கு எந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நேற்று காலை 7.30 மணிக்கு அஸ்திர கும்பங்கள் பூஜை, சிலைகளுக்கு காப்பு கட்டுதல், நாடி சந்தானம், 4-ம் கால யாக பூஜை, குடங்கள் ஆலயம் வருதல் ஆகியவை நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் 9.15 மணிக்கு விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.