காஞ்சீபுரம் பட்டு சேலையில் காமாட்சி அம்மன் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாமம்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மனின் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை பட்டு சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது.;
பட்டு நகரம் என பெயர் பெற்ற காஞ்சீபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத்தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு - கலையரசி தம்பதி. பட்டுச்சேலை வடிவமைப்பு, கைத்தறி நெசவு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதை அறிந்த காஞ்சீபுரம் காமாட்சி அம்மனின் தீவிர பக்தரான மலேசியாவை சேர்ந்த நாராயணமுர்த்தி காஞ்சீபுரம் பட்டு சேலையில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மனின் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை வடிவமைத்து அம்மனுக்கு சமர்ப்பிக்கும் தனது 12 ஆண்டு கால கனவை நிறைவேற்றி தர முடியுமா என குமரவேலு - கலையரசி தம்பதியை அணுகியுள்ளார்.
அவர்களும் விரதம் இருந்து, தக்காளி சிகப்பு நிற தூய பட்டு நூலில், வெள்ளி ஜரிகையை பயன்படுத்தி காமாட்சி அம்மனின் புகழ் பாடும் 'லலிதா சகஸ்ரநாம' அர்ச்சனையின் 1000 ஸ்லோகங்களை பட்டுச்சேலையில் வரும்படியும், சேலையின் முந்தானையில் கல்வி கடவுளான ஹயக்ரீவர் அமர்ந்த கோலத்தில் அகத்தியருக்கு உபதேசிக்கும் காட்சியும், அதை கரும்பை கையில் கொண்ட காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் நின்ற கோலத்தில் உற்று நோக்கும் காட்சியை தத்ரூபமாக நெசவு செய்து தயாரித்து முடித்துள்ளனர்.
இதற்கு 700 கிராம் நவ வர்ணம் எனும் 9 வகையான பட்டு நூலையும், 600 கிராம் தூய வெள்ளி் ஜரிகை நூலையையும் பயன்படுத்தி 1 கிலோ 300 கிராம் எடையுள்ள 18 முழம் பட்டு சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது.