வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 வயது சிறுமி
கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2022-ம் ஆண்டு பள்ளியில் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அந்த சிறுமி, தன்னுடைய வளர்ப்பு தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக அழுதுகொண்டே புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து சமூகநலத்துறை சார்பில், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் கோர்ட்டில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
சிறுமியின் தாய், ஆட்டோ டிரைவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அந்த சிறுமி 2 வயது குழந்தையாக இருக்கும்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் சிறுமிக்கு 13 வயது ஆகும்போது, அந்தவளர்ப்பு தந்தை இரவு நேரத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
ஆயுள் தண்டனை
இதைத் தொடர்ந்து வளர்ப்பு தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம்சாட்டப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரஷிதா ஆஜர் ஆகி வாதாடினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வளர்ப்பு தந்தை கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.