சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டம்
வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மடியேந்தி போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விஜயலட்சுமி, புவனேஸ்வரி, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்க மாநில செயலாளர் சுமதி, செயற்குழு உறுப்பினர் ருக்குமணி, அனைத்துத்துறை ஓய்வு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட தலைவர் ஜோஷி, செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மடியேந்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.