மதுரை-திருமங்கலம் இரட்டை அகலப்பாதை பணி: தென் மாவட்ட ரெயில்கள் இன்று முதல் மதுரை வழியாக இயக்கம்
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் தென்மாவட்ட ரெயில்கள் வழக்கம் போல மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.;
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் தென்மாவட்ட ரெயில்கள் வழக்கம் போல மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.
இரட்டை அகலப்பாதை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை-மீளவிட்டான், மணியாச்சி-நெல்லை இடையே இரட்டை அகலப்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கோவில்பட்டி-கடம்பூர், மீளவிட்டான்-தூத்துக்குடி, திருமங்கலம்-மதுரை இடையேயான இரட்டை அகலப்பாதை பணிகள் நடந்து வந்தன. இதில், கோவில்பட்டி-கடம்பூர் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் ரெயில்வே போக்குவரத்து கமிஷனர் மற்றும் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கான தலைமை என்ஜினீயர் ஆகியோரின் ஆய்வு முடிந்து போக்குவரத்து திறந்து விடப்பட்டது.
அதன்பின்னர், திருமங்கலம்-மதுரை இடையே பணிகள் முடிந்து அந்த பாதையை திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் மட்டும் பாக்கி இருந்தது. அதனைதொடர்ந்து, இரட்டை அகலப்பாதை பணிகளை, கடந்த 13-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அந்த பாதையில் 123 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்தார். இந்த பணிகளுடன் மின்சார ரெயில் இயக்குவதற்கான மின்மயமாக்கல் பணிகளும் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
அந்த பணிகள் அனைத்தையும் தென்னக ரெயில்வேக்கான தலைமை மின்மயமாக்கல் பிரிவு என்ஜினீயர் ஆய்வு செய்து ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில், தண்டவாளங்களை இணைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடந்தது. பின்னர், கடந்த 5-ந் தேதி முதல் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக திருமங்கலம்-மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்கள் மற்றும் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் ரெயில்கள் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று முதல் வழக்கம் போல
இதில், மதுரை-சென்னை பாண்டியன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை-கோவை (பழனி வழி) ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மதுரை-செங்கோட்டை நண்பகல் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில், மதுரை-தேனி சிறப்பு ரெயில் மற்றும் தினசரி 3 முறை இயக்கப்படும் மதுரை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்கள் ஆகியன முழுமையாக ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த பணிகளை தென்னக ரெயில்வேக்கான தலைமை நிர்வாக அலுவலர் வேக சோதனை நடத்தி ஆய்வு செய்தார். இதையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) தென் மாவட்ட ரெயில்கள், ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் அனைத்தும் வழக்கம் போல மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதம் நடந்து வந்த இந்த பணிகளால் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். தற்போது நெல்லையில் இருந்து -சென்னை வரை இரட்டை அகலப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை-தேனி மற்றும் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்கள் இருமார்க்கங்களிலும், ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை மதுரைக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில், மதுரையில் இருந்து நண்பகல் 11 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரெயில் ஆகியன மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
மதுரை ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 1-வது பிளாட்பாரம், 2 மற்றும் 3-வது பிளாட்பாரம், 4 மற்றும் 5-வது பிளாட்பாரம், 6-வது பிளாட்பாரம் என உள்ளது. இது தவிர 10 தண்டவாள பாதைகள் உள்ளன. இவற்றில் 6-வது பிளாட்பார பகுதி 14 ரெயில் பெட்டிகள் மட்டும் நிறுத்தும் அளவிற்கு வசதி கொண்டது. இந்த பிளாட்பாரத்தில் இருந்து செங்கோட்டை, தேனி ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. பெரும்பாலும், மதுரை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் ரெயில்களை பெட்டிகள் பராமரிப்புக்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் பாதையாக பயன்படுகிறது.
அதேபோல, விருதுநகர், மானாமதுரை மார்க்கங்களில் இருந்து மதுரை வரும் ரெயில்கள், திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து மதுரை வரும் ரெயில்கள் ஒரே நேரத்தில் மதுரை ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணியை தொடர்ந்து, சென்னையில் இருந்து மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும், தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாத நிலை இருந்தது.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்
அதாவது, சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் மார்க்கத்தில் மதுரை ரெயில் நிலையத்திற்குள் வரும் நேரத்தில், மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வைகை ஆற்றுப்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற பின்னர், மதுரை ரெயில் நிலையத்திற்குள் வந்தடையும். அதேபோல, தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்குள் வரும் நேரத்தில் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதால், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆண்டாள்புரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும்.
தற்போது இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணியில், தென் மாவட்டங்களில் மதுரை வரும் ரெயில்களும், திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து மதுரை வரும் ரெயில்களும் ஒரே நேரத்தில் மதுரை ரெயில் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் இடவசதியை பொறுத்து வெவ்வேறு பிளாட்பாரங்களில் நிறுத்தப்படும். இதற்காக சுமார் 32 பாயிண்டுகள் (ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் தண்டவாள இணைப்பு/பிரிப்பு பாதை) கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 7-வது தண்டவாள பாதையில், 24 பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை நிறுத்தும் அளவுக்கு புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.