ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல்; வாலிபர் கைது

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-07 19:15 GMT

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசினர் தன்னாட்சி ஆண்கள் கல்லூரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையில் எம்.பில். படிக்கும் மாணவர் சதீஷ்குமார், ஆர்ப்பாட்டத்தை நிறுத்த கூறி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சதீஷ்குமார், வேதியியல் 3-ம் ஆண்டு படிக்கும் திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்ரீநாத் (வயது 22) , புவியியல் முதலாம் ஆண்டு மாணவர் கார்த்தி ஆகிய 3 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

வாலிபர் கைது

மேலும் கல்லூரியில் மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்காக, கல்லூரிக்கு வந்த முன்னாள் மாணவரும், முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளருமான பிரபாகரன், இந்தியக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் சாஜீஜேம்ஸ் ஆகிய 2 பேரையும் கீழே தள்ளி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் சாஜீஜேம்ஸ் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாஜீ ஜேம்ஸ் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சதீஷ்குமார், ஸ்ரீநாத், கார்த்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்