குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதிக்கு மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. .இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேர் நேற்று காலை 9 மணிக்கு சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுல்தான்பேட்டையிலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் அமர்ந்து குடிநீர் சீராக வினியோகிக்கக்கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை மறியலை கைவிட்டு கலைந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, துணைத்தலைவர் தாஹாநசீர், கிராம நிர்வாக அதிகாரி முத்துபரமேஸ்வரி, வருவாய்த்துறை அதிகாரி கலையரசன்,ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்"குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.