மணல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
நெரூர், அச்சமாபுரம் பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
கருத்து கேட்பு கூட்டம்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடக்கு கிராமம் மற்றும் அச்சமாபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ள மணல் குவாரி திட்டம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று வாங்கல் மேலசக்கரபாளையத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெரூர், அச்சமாபுரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
எதிர்ப்பு
கூட்டத்தில் புகழூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ராஜேஷ் என்பவர் கருத்து தெரிவிக்கும்போது ஒரு தட்டில் மணல் மற்றும் பூ வைத்துக்கொண்டு வந்தார். மேலும் அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமூடி அணிந்து கொண்டு கருத்தை தெரிவித்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவர் முகமூடியை அகற்றி கருத்து தெரிவித்தார்.
அ.தி.மு.க. எதிர்ப்பு
கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, புதிய மணல் குவாரி அமைவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்சினைகள் பற்றியும் கூறினார். மேலும் எந்திரங்கள் உதவியுடன் மணல் அள்ளுவதற்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பை தெரிவித்தும், உள்ளூர் தேவைகளுக்காக மாட்டு வண்டிகளில் மனித சக்தி மூலம் மணல் அள்ள அனுமதி வழங்குமாறும் மனு அளித்தார்.
2 ஆயிரம் லாரி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆறு கடந்த 50 ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டு பாலைவனமாக இருக்கிறது. அமலாக்கத்துறை சோதனையால், செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவிரியில் மனித சக்தியை கொண்டு மாட்டு வண்டிகளில் பொதுப்பணித்துறை அனுமதியோடு கட்டணத்தை செலுத்தி மணல் அள்ளுவதற்கு சியா கமிட்டியில் நான் அமைச்சராக இருந்தபோது உத்தரவு வாங்கிக் கொடுத்தேன். அப்போது தி.மு.க.வினர் பொய்யான அனுமதி என்ற நாடகத்தை நடத்தினர். தற்போது அதை திருத்தி 4 ½ எக்டேரில் அனுமதி பெற்று கடந்த 8 மாதமாக 100 ஏக்கரில் 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளிவிட்டனர். ஒரு நாளைக்கு 10 லாரிகளுக்கு கணக்கு காண்பித்துவிட்டு தினமும் 2 ஆயிரம் லாரிகளில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தெரிந்து கொண்டு அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதனால் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டன.
உறுதுணையாக இருப்போம்
கரூர் மாநகராட்சி குடிநீர் திட்டம், மாவட்ட ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டம், நாமக்கல் குடிநீர் திட்டம், திண்டுக்கல் குடிநீர் திட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி முழுவதுமான 2 குடிநீர் திட்டம், ராமநாதபுரம் குடிநீர் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் சியா கமிட்டி அதிகாரிகள், இப்பகுதிக்கு வராமல் கையெழுத்து போட்டுள்ளனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, நாங்கள் உள்ளூர் தேவைகளுக்கு மனித சக்தியைக்கொண்டு மாட்டு வண்டிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியோடு மணல் அள்ளுவதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மீண்டும் லாரிகளில் மணல் அள்ளினால், அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். விவசாயிகளுக்கும், மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.