கோவையில் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்
கோவையில் அவினாசி ரோடு, சத்தி ரோடு ஆகிய 2 வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இது 45 கிலோ மீட்டர் தூரத்தில் 30 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.;
கோவையில் அவினாசி ரோடு, சத்தி ரோடு ஆகிய 2 வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இது 45 கிலோ மீட்டர் தூரத்தில் 30 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் திட்டம்
கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை நகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிக ரித்து வருகிறது. எனவே மெட்ரோ ரெயில் திட்ட அறிவிப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த திட்டப் பணிகளுக்காக தனது டெப்போவை வெள்ளலூரில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைக்க உள்ளது.
வெள்ளலூர், உக்கடம் பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், லட்சுமி மில், நவ இந்தியா, பீளமேடு புதூர், ஹோப்கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, விமானநிலையம், நீலாம்பூர், பி.எஸ்.ஜி. பவுண்டரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் முதல்கட்ட காரிடார் -1 செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்ட திட்டம் 31.7 கிலோ மீட்டர் தூரமாகும்.
நிலம் எடுப்பது சிரமம்
கோவை- அவினாசி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,625 கோடி செலவில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. எனவே இந்த சாலையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் மிகவும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோவை- அவினாசி சாலையில் சுரங்கம் தோண்டுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். எனவே மெட்ரோ ரெயில் நிர்வாகம் மாற்று திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
ரெயில் காரிடார் 2-வது திட்டம்
மெட்ரோ ரெயில் காரிடார்- 2 திட்டம் கலெக்டர் அலுவலகம், ராம்நகர், காந்திபுரம் பஸ்நிலையம், ஆம்னி பஸ்நிலையம், மூர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திப்பாளையம் ஜங்சன், ராமகிருஷ்ணா மில், வினாயகபுரம், சித்ரா நகர், சரவணம்பட்டி, விசுவாசபுரம், வி.ஜி.பி. நகர், வையம்பாளையம் பிரிவுவரை 14 கிலோமீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
விரைவில் செயல்படுத்த வேண்டும்
கொங்கு குளோபல் அமைப்பு இயக்குனர் ஜே.சதீஷ்:-
மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. கூடிய விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மெட்ரோ ரெயில் மக்களுக்கு பாதுகாப்பான பயணம், சுற்றுச்சூழலுக்கு உகந்தது, விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது என்று பல்வேறு பயன்கள் உள்ளன. கோவை நகருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் உகந்த திட்டமாக இருக்கும்.
ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயராஜ்:-
மெட்ரோ ரெயில் திட்டம் கோவை நகர வளர்ச்சிக்கு மேலும் உதவியாக அமையும். கோவைக்கும், கொச்சிக்கும் ஒரே நேரத்தில் மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டது. கொச்சியில் தற்போது மெட்ரோ ரெயில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்ட பணிகள் விரைவாக நடைபெற வேண்டும். மேலும் சிங்காநல்லூர், சரவணம்பட்டியில் மேம்பால பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
போத்தனூர் ஜங்ஷன்
போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க சுப்பிரமணியம் :-
மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் போத்தனூர் பகுதி மேம்படும். தற்போது போத்தனூர் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடக்கிறது. போத்தனூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் மெட்ரோ ரெயிலிலில் ஏறி நகரின் பல பகுதிகளுக்கு விரைந்து செல்ல உதவும். எனவே இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். உக்கடம் மேம்பால பணிகள் முடிவடை யும் போது, சென்னை போல் கோவை ஜங்சன், போத்தனூர் ஜங்சன் என்று பெரிய ரெயில் நிலையங்களாக மாற வாய்ப்பு உள்ளது.
இரட்டை நகரங்கள் இணையும்
ராக் அமைப்பு நிர்வாகி ரவீந்திரன்:-
மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவை நகரில். வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நீலாம்பூர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் திருப்பூர் வரை நீட்டித்தால் கோவை, திருப்பூர் இரட்டை நகரங்களை இணைக்கும் சிறந்த போக்குவரத்து திட்டமாக அமையும். தென் இந்தியாவின் தொழில் நகரமான கோவை, திருப்பூர் மேலும் வளர்ச்சி அடைந்து தொழில்துறை சிறப்பான முன்னேற்றத்தை அடையும். எனவே மெட்ரோ ரெயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
2 காரிடார் திட்டங்கள் (Box)
மெட்ரோ ரெயில் காரிடார்-1 திட்டம் வெள்ளலூரில் தொடங்கி நீலாம்பூரில் முடிவடைகிறது. 31.7 கிலோ மீட்டர் தூரமாகும்.
காரிடார்-2 திட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி சத்தி ரோடு, வையம்பாளையம் பிரிவில் முடிகிறது. இதன் தூரம் 14.1 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த திட்டங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) செயல்படுத்துகிறது.
இறுதி திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 மாதங்களில் மெட்ரோ ரெயில் இறுதி திட்ட அறிக்கை தயாராக உள்ளது.