பரமத்திவேலூர் அருகேமினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம்கலெக்டர் உமா நேரில் ஆறுதல்

பரமத்திவேலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2023-10-11 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் உமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மினி பஸ் கவிழ்ந்தது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொன்மலர் பாளையத்தில் இருந்து நேற்று காலை மினி பஸ் ஒன்று பரமத்திவேலூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பள்ளி மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. பஸ்சை சந்தோஷ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். மினி பஸ் கருக்கம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பியதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் பஸ்சுக்குள் இருந்த மாணவிகள், பயணிகள் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்து பஸ்சுக்குள் சிக்கி தவித்த 16 பேரை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து டிரைவர் சந்தோசுக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கலெக்டர் ஆறுதல்

விபத்தில் காயமடைந்த பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீ மதி (17), தேசிகா (15), அனுசுயா (17), முத்துலட்சுமி (16), தீபிகா (17), சுஜிதா (15), தேவதர்ஷினி (17), கருக்கம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (16), மகாஸ்ரீ (16), பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பார்மசி பயிலும் கொந்தளத்தை சேர்ந்த மகிமா (21), அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் லலிதா (42), சின்னத்தம்பி (21), கனகா (26), ஜோதி (26), அண்ணாமலை (32), நாகம்மாள் (21) ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் உமா நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கவும், உரிய சிகிச்சை வழங்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்