மத்திய அரசால் நிதிஉதவி அளிக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மத்திய இணை மந்திரி அன்பூர்ணா தேவி பேச்சு
மத்திய அரசால் நிதிஉதவி அளிக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மத்திய இணை மந்திரி அன்பூர்ணா தேவி பேச்சு;
மத்திய அரசால் நிதிஉதவி அளிக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் மத்திய இணை மந்திரி அன்பூர்ணா தேவி கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்பூர்ணா தேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சின்ராஜ், ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜானா, பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உள்ளிட்ட திட்டங்களின் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மத்திய இணை மந்திரி அன்பூர்ணா தேவி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டிற்காகவும், உட்கட்டமைப்பு ஏற்படுத்தவும் பல்வேறு வகையில் நிதி ஆதாரங்களை வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்பட்ட திட்டங்களின் பணிகளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வீடு கட்டுவதற்கான ஆணை
இக்கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-
தமிழக அரசு உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர பொதுமக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு மொத்தம் ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளையும் மத்திய இணை மந்திரி அன்பூர்ணா தேவி வழங்கினார்.
புகைப்பட கண்காட்சி
இதனைத்தொடர்ந்து, நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பள்ளி ஆயத்த மையம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை மத்திய இணை மந்திரி நேரில் பார்வையிட்டார்.
மேலும் வீசாணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு உள்ள அடர்வனத்தை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஊரக வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அத்தனூர் வரலட்சுமி ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் பணியின் பல்வேறு நிலைகளை மத்திய இணை மந்திரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் மத்திய கல்வித்துறை இணை மந்திரியின் தனி செயலாளர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் நாகராஜமுருகன், தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.