பழைய கார் தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
நாமக்கல்:
பழைய கார் தருவதாக கூறி, ஆன்லைனில் லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 54). லாரி டிரைவர். இவர் பேஸ்புக் மூலம் பழைய காரை வாங்குவதற்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
இதையடுத்து இவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னிடம் பழைய கார் ஒன்று இருப்பதாக கூறி உள்ளார். அதை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் தருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதை உண்மை என நம்பி, லட்சுமணன் மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணிற்கு போன்-பே மூலம் 2, 3 கட்டங்களாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
போலீசார் விசாரணை
2 ஆண்டுகள் ஆகியும் அந்த மர்ம நபர் பழைய காரை கொடுக்கவில்லை. அவர் கொடுத்த செல்போன் எண்ணும் தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் தான் ஏமாற்றமப்பட்டதை அறிந்த லட்சுமணன் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.