நகைக்கடை ஊழியரிடம் பணம் மோசடி

ஓசூரில் போலீஸ் என கூறி நகைக்கடை ஊழியரிடம் ஆபாச படம் பார்த்ததாக செல்போனில் மிரட்டி, பணம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-05 18:45 GMT

ஓசூரில் போலீஸ் என கூறி நகைக்கடை ஊழியரிடம் ஆபாச படம் பார்த்ததாக செல்போனில் மிரட்டி, பணம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைக்கடை ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 33). இவர் நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் தான், சென்னை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளனர். அதை நம்பிய சந்திரகுமார் 'போன் பே' மூலம் 3 தவணைகளாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் பேசிய மொபைல் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் 'சிம்கார்டு' விற்கப்பட்டதும் தெரிந்தது. பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரித்தபோது பணம் பெற்றவர் சேலம் மாவட்டம், கரடூர் மணிமுத்து என்பதும், அவரும் நண்பர்கள் 3 பேர் இணைந்து பணம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

மேலும் யூடியூப்பில் போலீஸ் 'வாக்கி டாக்கி' சத்தத்தை வைத்து விட்டு அதன் பின்னர் மொபைலில் நகை கடை ஊழியரிடம் போலீஸ் என கூறி பேசி பணம் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை போல அவர்கள் பலரிடம் மிரட்டி பணம் மோசடியில் ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

4 பேர் கைது

இதையடுத்து சந்திரகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் போல் மிரட்டி பணம் மோசடியில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுங்கரஅள்ளியை சேர்ந்த மால்வின் (22), சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா கொலகூரை சேர்ந்த மணிமுத்து (23), கிருஷ்ணகிரி மாவட்டம், சாப்பர்த்தி வேடியப்பன் (28), காரிமங்கலம் கீழ்வீதி மாரியப்பன் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகம், டெபிட் கார்டுகள், 4 சிம்கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் இவர்கள் வேறு யாரிடமும் மிரட்டி பணம் பெற்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்