கோவையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின
தொடர் மழை காரணமாக கோவையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்;
தொடர் மழை காரணமாக கோவையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியது. இதையொட்டி கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
குறிப்பாக கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மலையில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. இது காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நொய்யல் ஆற்றில் வெள்ளம்
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆற்று தண்ணீர் குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்கின்றன. இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. இதன் உபரி நீர் பிற நீர்நிலைகளுக்கும் செல்கிறது.
கோவையை அடுத்த இருட்டுப்பள்ளத்தில் உள்ள பெருமாள் கோவில்பதி தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 30 அடி உயரம் கொண்ட தடுப்பணை நிரம்பியது. இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
குளங்கள் நிரம்பின
கோவையில் பெய்யும் தொடர் மழையால் தடுப்பணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பெரும் பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 24 குளங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக உக்குளம், புதுக்குளம், நரசாம்பதி குளம், வேடப்பட்டி குளம், கோளராம்பதி குளம், சொட்டையாண்டி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம்
ஒரு சில குளங்களின் நீர் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத தால் நீர்வரத்து குறைவாக உள்ளது. எனவே குளங்களுக்கு செல் லும் நீர் வழித்தடங்களில் உள்ள புதர்களை அகற்றி தூர்வார வேண்டும். இன்னும் சில நாட்களுக்கு மழை நீடித்தால் அனைத்து குளங்களும் நிரம்பி விடும்.
நொய்யல் ஆற்றில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.