திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை

திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.;

Update:2023-03-04 02:00 IST

திண்டுக்கல்லில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

கூலித்தொழிலாளி

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையை சேர்ந்தவர் வீரன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தனம் என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். வீரனின் தந்தை சின்னு தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசிக்கிறார். தந்தையை பார்ப்பதற்காக வீரன் அவ்வப்போது சந்தைப்பேட்டை பகுதிக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீரன் தனது ஸ்கூட்டரில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சுகாதார வளாகம் அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர், வீரனிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கயிற்றால் வீரனின் கழுத்தை இறுக்கினர். பின்னர் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டனர்.

மோப்பநாய்

இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே வீரன் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் வீரன் பிணமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதையடுத்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீரனின் உடல் மற்றும் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அருகில் உள்ள மரக்கடையின் பின்புறம் உள்ள வீட்டுக்குள் சென்று அமர்ந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

2 பேரிடம் விசாரணை

அதன் பின்னர் வீரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் போலீசார் சோதனையிட்ட போது, ஒரு செல்போன் கிடைத்தது. அந்த செல்போனை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் பதுங்கி இருக்கும் விவரம் தெரியவந்தது.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் கொலையாளிகள் அவர்கள் தானா? என்பதும், எதற்காக கொலை செய்தார்கள் என்றும் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்