முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மேலமடை கிராம மக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

Update: 2022-09-26 16:46 GMT


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மேலமடை கிராம மக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சியை சேர்ந்த மேலமடை, கருக்காத்தி, கண்ணியாபுரம், கொம்பூதி காலனி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக எந்த பணியும் நடக்கவில்லை. சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றித்தரவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், யூனியன் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை.

விசாரணை

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் எங்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து விளக்கி கூறியும் செய்துதரவில்லை. ஊராட்சி நிதியை லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த தவறை கண்டுகொள்ளாமல் உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களின் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்ற தொடர் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிடுவதாகவும் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்