காலிகுடங்களுடன் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-11-08 14:01 GMT

கீழக்கரை, 

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான முனீஸ்வரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ் வரம் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் பல வருடங்களாக குடிநீர் வருவது இல்லை.

இதனால் முனீஸ்வரம் கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈ.சி.ஆர்.சாலை வழியாக பெண்கள் தள்ளுவண்டி மூலம் இரவு பகலாக மோர்குளம் அருகில் உள்ள குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்துச் சென்று வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகனம் மூலம் விபத்துகளும் ஏற்படுகிறது என்று அந்த கிராம மக்கள் புகார் கூறினர்.

கோரிக்கை

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங் களுடன் கீழக்கரை தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது தாசில்தார் சரவணன் கிராம மக்களின் மனுவை பெற்றுக்கொண்டு ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தியை வரவழைத்து விசாரித்தார். விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கிராம மக்களிடம் சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து முனீஸ்வரம் கிராத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்